Wednesday, January 18, 2012

எல்லோரும் மனிதர்கள் தான்!

எல்லோரும் மனிதர்கள் தான்!


கமாலும், பரீதும் இணை பிரியாத நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்தனர். இருவருக்கும் பத்து வயது ஆகியிருந்தது. கமாலின் தந்தை ஊரிலேயே பெரும் செல்வந்தர். அவரை அவ்வூரில் உள்ள யாவரும் மிகவும் மதித்தனர்.

ஆனால் பரீத் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன். பரீதின் தந்தை மரக்கறி வியாபாரம் செய்து வந்தார். ஆதலால் மழைக்காலங்களில் அவர்கள் சிலநாட்கள் பட்டினியில் வாடுவார்கள். யாரிடமும் தமது கஷ்டங்களைக் கூறி உதவி கேட்க மாட்டார்கள். பரீதின் தந்தை ஏழை என்றாலும் சிகரட், மதுபானம் என்று எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர். ஐந்து நேர தொழுகையையைப் பேணுதலாக தொழக்கூடியவர்.



கமாலின் தந்தை இவற்றுக்கு நேர் எதிரானவர். அவர் பணத்திமிரால் ஊரில் உள்ள ஏழைகளை மதிக்கமாட்டார். சொகுசு காரில் ஆடம்பரமாக ராஜா என்ற நினைப்பில் உலா வருவார்.

தாம் கஷ்டப்படுவதைப் போல் தமது பிள்ளைகளும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணத்தில் பரீதையும் நல்ல பாடசாலையில் சேர்த்திருந்தார் அவரது தந்தை. கமாலும் அதே பாடசாலை என்பதால் பரீத், கமாலின் பணக்கார தோற்றத்தைக் கண்டு வியந்திருக்கிறான்.

அயன் களையாத சேர்ட், பளிச்சிடும் சப்பாத்து, அழகிய பாடசாலை பேக், வர்ண மயமான தண்ணீர் போத்தல் என்பவற்றுடன் நிறந்தீட்டும் பென்சில், வர்ண வர்ண பேனாக்கள், பெரிய அழிறப்பர் என்று அழகான பொருட்களை கமால் கொண்டு வருவான். அதைப் பார்க்கும்போது பரீதுக்கு மிகவும் ஆவலாக இருக்கும். அவற்றை தொட்டுத் தொட்டு பார்ப்பான்.

அதுமட்டுமல்லாமல் கமால் இடியப்பம், நூடுல்ஸ், பயறு என்று விதவிதமான சாப்பாடு வகைகளைக் கொண்டுவருவான். இதையெல்லாம் பார்க்கும் போது பரீதுக்கும் ஆசை வரும். ஆனாலும் 'உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்' என்று பரீதின் தாய் சொல்லிக்கொடுத்து இருந்த விடயம் பரீதுக்கு ஞாபகம் வரும். தந்தையும் வறுமையால் கஷ்டப்படுவதை எண்ணிவிட்டு பேசாமல் இருந்துவிடுவான்.

பரீதிடம் இருப்பது கிழிந்த பாடசாலை பேக் ஒன்றும், குச்சி பென்சில் ஒன்றும், கசங்கிய ஆடைகளும் தான். பொலித்தீன் பையில் தான் அவன் தினமும் ரொட்டியை சுற்றிக்கொண்டு வருவான். நிறம் மங்கிப்போன பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் சுட்டு ஆறிய நீரை எடுத்துக்கொண்டு வருவான்.

இருவரும் ஒன்றாக இருந்து சாப்பிடுவார்கள். பரீத் வெளியே சென்று கையைக் கழுவிவிட்டு வந்து அல்லாஹ்வைப் புகழ்ந்தவாறு சாப்பிட ஆரம்பிப்பான். அவன் செய்வதையே கண்கொட்டாமல் பார்த்துவிட்டு கமால் அவனிடம்,

'ஏன் பரீத் ரொட்டி தானே கொண்டு வந்திருக்கிறாய். அதை லேசாக சாப்பிடலாம் தானே? ஏன் கை கழுவுகிறாய்?' என்று கேட்பான். அதற்கு பரீத்,

'இல்ல கமால் கை கழுவிவிட்டு சாபபிடுவதுதான் ஆரோக்கியம் என்று சுகாதாரப்பாட டீச்சர் சொல்லித் தந்தாங்களே. அத்துடன் நாம் சாப்பிடும் போது அல்லாஹ்வை மறந்துவிடக் கூடாது என்று உம்மா சொல்லித் தந்திருக்காங்க' என்றான்.

கமாலுக்கு கவலையாக இருந்தது. அவனது தாய் எந்நேரமும் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பாள். சாப்பாடு கேட்டாலும் போட்டுச் சாப்பிடு என்பாள். எப்போதும் வீட்டில் கோழிக்கறி, இறைச்சி, மீன் என்று ஆடம்பர கறிகள் தான்.

பரீத் கொண்டு வருவது போல கீரைச் சுண்டல், வட்டக்காய் கறி, நெத்தலி பொரியல் ஆகியவற்றோடு சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று நினைப்பான். அதைப் பெற்றோரிடம் சொன்னால் அடிதான் கிடைக்கும். அதனால் பரீதின் சாப்பாட்டை மிகவும் ஆசையுடன் சாப்பிடுவான் கமால்.

ஒருநாள் அதிபரை சந்திக்க வந்திருந்த கமாலின் தந்தை, பரீத் தனது மகனுடன் சேர்ந்து சாப்பிடுவதைக் கண்டுவிட்டார். பாடசாலை என்றுகூட பார்க்காமல் பரீதை அறைந்துவிட்டார். கமால் அழுது கெஞ்சியும் அவர் பரீதை முறைத்துக்கொண்டே இருந்தார்.

கண்களால் பரீதிடம் மன்னிப்பு கேட்டான் கமால். தந்தை தரதர என்று கமாலை இழுத்துச் சென்று காரில் தூக்கிப் போட்டார். போகும் வழியில் எல்லாம் கமாலை திட்டிக்கொண்டே போனார்.

'காலை உடைப்பேன் ராஸ்கல். உன்னப்போல எத்தனை பணக்காரப் பிள்ளைகள் அந்தப் பாடசாலையில் படிக்கிறாங்க? உனக்கு அந்த மரக்கறிகாரன்ட மகன் பரீத் தான் நண்பனாக கிடைச்சானா?' என்று கேட்டார். 'உன்னை வேறு பாடசாலைக்கு மாத்தினால்தான் சரி. இல்லாட்டி இந்த கையேந்திகளோடதான் பழகுவாய்' என்று முணுமுணுத்துக்கொண்டே வந்தார்.

எதிரில் பெரிய லொறி ஒன்று வந்துகொண்டிருந்தது. கமால் கண்டுவிட்டு 'வாப்பா...!' என்று அலறினான். ஒரு கணத்துக்குள் எல்லாமே நடந்து முடிந்தது. நல்ல வேளை கமாலுக்கு எந்த ஆபத்தும் இல்லை. தந்தைக்குத்தான் பலமான அடி. அவ்வழியாக வந்துகொண்டிருந்த பரீதின் தந்தை விபத்தைக் கண்டதும் ஓடி வந்து உடனடியாக கமாலின் தந்தையை வைத்தியசாலையில் அனுமதித்தார்.

இரண்டு நாட்கள் கழிந்ததும் கமாலின் தந்தை கண்விழித்தார். அவரை வைத்தியசாலைக்கு தூக்கிவந்தது பரீதின் தந்தை என்று அறிந்ததும் அவருக்கு தனது தவறு புரிந்தது.

'ஏழைகள் என்றாலும் உதவிசெய்யத் தயங்காதவங்க நீங்க. எல்லோரும் மனிதர்கள்தான். இனிமேல் ஏழை, பணக்காரன் என்று பேதம் பார்க்கமாட்டேன். தெரியாமல் உங்கள் மகனை அடித்துவிட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்க' என்று மன்னிப்புக் கேட்டார் கமாலின் தந்தை.

அதன் பிறகு பரீதையும் தனது மகனாக எண்ணி அவனுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் யாவற்றையும் வாங்கிக்; கொடுத்தார். சிறியவர்களின் அன்பால் கவரப்பட்ட கமாலின் தந்தை எல்லோரையும் மதித்து வாழப் பழகிக்கெண்டார்.

படிப்பினைகள் –
01.மனிதர்கள் யாவரையும் சமமாக மதிக்க வேண்டும்.
02.நல்ல நட்பு நன்மையையே தரும்.

1 comment:

  1. றிஸ்னா உங்களது புளொக் மிகவும் சிறப்பாக உள்ளது.இதனை தொடர்ந்து கொண்டு செல்லுங்கள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete

மின்ட்டு

கதைச் சுருக்கம் மின்ட்டு பறந்து சென்று கொண்டிருந்த போது ஒரு பழுத் பலாப் பழத்தின் வாசைன அதன் மூக்கை துளைத்தது. அதைச் சாப்பிட ...